சுயமரியாதை மகாநாடு முன்னேற்பாடு கூட்டம். குடி அரசு - சொற்பொழிவு - 15.021931 

Rate this item
(0 votes)

வரவேற்புத் தலைவர்களோ, நண்பர்களே இன்று இங்கு கூடியிருப்பது 3-வது சுயமரியாதை மகாநாட்டை விருதுநகரில் நடத்தும் விஷய மாய் யோசிப்பதற்காகவேயாகும். மகாநாட்டை ராமனாதபுரம் ஜில்லாவில் நடத்துவதென்பது சென்ற வருஷம் ஈரோட்டில் நடந்த இரண்டாவது மகா நாட்டின் போதே இச்சில்லாவாசிகள் அழைக்கப்பட்டு தீர்மானித்த விசய மாகும். இராமநாதபுரம் ஜில்லாவில் எங்கு நடத்துவது என்பது சமீபத்தில் ஈரோட்டில் நடந்த நிர்வாக சபை கூட்டத்தில் விருதுநகர் பிரமுகர்களில் சிலர் முன்னிலையில் அவர்களது சம்மதத்தின் மீது முடிவு செய்ததாகும். 

ஆகவே இங்கு நடைபெறும் விஷயத்தில் எல்லாவற்றையும் விட இவ்வூர் பிரமுகர்களுடையவும், வாலிபர்களுடையவும் ஒத்துழைப்பும் ஊக்கமுமே அதிகமாக வேண்டியதாகும். நமது இயக்கத்தின் முக்கியத்தைப் பற்றியும் அதன் பயனைப் பற்றியும் உங்களுக்கு அதிகம் சொல்ல வேண்டிய தில்லை. இதற்கு ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பிரசாரமும் இதற்கு ஏற்பட்டிருக்கும் எதிரிகளின் தன்மையும் கவனித்தாலே விளங்கிவிடும், எப்படி எப்படியோ மூன்று நான்கு வருஷங்களை இயக்கப் பிரசாரம் நடைபெற்றதுடன் இரண்டு பெரிய மகாநாடுகள் நடந்து மூன்றாவது மகாநாடு நடக்கப் போகின்றது. இயக்கம் ஆரம்பித்தவுடன் பலர் இது மூன்று நாளையில் செத்துப்போய் விடும் என்றார்கள். ஆரம்பத்திலேயே மதக்காரர்களும் வெகு பலமாக உண்டாக்க முயன்றார்கள். என்மீது சொந்தமுறையில் பல பழிப்புகளையும் கெட்ட எண்ணங்களையும் உண்டாக்கினார்கள். 

அவ்வளவையும் தாண்டி எதிரிகளுக்கு சமீபமாய் செங்கற்பட்டி லேயே முதலாவது மகாநாடு மிகவும் பிரக்யாதியாய் நடந்தது. அந்த மகாநாட்டிற்கு அநேகமாய் இம்மாகாணப் பிரபலஸ்தர்கள் உட்பட சுமார் பத்தாயிரம் போ விஜயம் செய்திருக்கிறார்கள். அதன் பிரபலத்தைப் பார்த்த எதிரிகள் இந்த வருஷம் ஏதோ ஜஸ்டிஸ் கட்சியார் மந்திரிகள் ஆகியவர் களிடமும் அரசாங்கத்தாரிடமும் உள்ள தனி செல்வாக்கு காரணமாய் மகாநாடு பிரபலமாய் நடந்துவிட்டதேயொழிய கொள்கையின் தத்துவத் தினாலல்ல என்று பேசியதோடு இனி அதே மகாநாடு எங்கும் நடக்காது என்றும் இதுவே முதலும் இதுவே கடைசியும் என்று சொன் னார்கள். மகாநாட்டுத் தீர்மானங்களைப் பற்றி நாடெல்லாம் விஷமபிரசாரம் செய்தார்கள். இவ்வளவையும் தாண்டி இரண்டாவது மகாநாடும் ஈரோட்டில் மந்திரிகள் தயவில்லாமலும், ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் தயவில்லாமலும் அரசாங்கத்தார் சம்மதமே சிறிதும் இல்லாமலும் இயக்க அனுதாபிகள் முயற்சியிலேயே செங்கற்பட்டு மகாநாட்டை விசேஷமாக இல்லா விட்டா லும் குற்றம் சொல்வதற்கில்லாமல் நடந்துவிட்டது. சட்ட மறுப்பு இயக்கத் தின் செல்வாக்கு நமது இயக்கத்திற்கு விரோதமாய் இருந்தும் லட்சியம் இல்லாமல் நடந்தேறிவிட்டது. அதற்குப் பிறகு இந்த வருடமும் இன்றுவரை கொள்கைகள் மேலும் மேலும் தீவிரமாய் குந்தகமும் இல்லாமல் இயக்கம் பரவிக்கொண்டே இருக்கிறது. 

ஆனால் இரண்டாவது மகாநாட்டைப் பார்த்தபின்பு நமது எதிரிகள் இந்த மகாநாடு ஈரோட்டில் அல்லாமல் வேறு எங்கு போட்டிருந்தாலும் நடந் திருக்காது. அவருடைய சொந்த ஊரானதினால் நடந்துவிட்டது. இனி அடுத்த வருஷம் நடக்காது என்றார்கள் பிறகு அடுத்த மகாநாடு இராம நாதபுரம் ஜில்லாவிற்கு அழைக்கப்பட்டிருக்கின்றது என்றவுடன் தலைவர் திரு. பாண்டியன் அவர்கள் இராமநாதபுரம் ஜில்லா போர்டு பிரசிடென்டாய் இருப்பதால் ஒரு சமயம் நடந்தாலும் நடக்குமேயொழிய மற்றபடி அந்த ஜில்லாவில் நடத்த முடியாது என்று சொன்னார்கள். ஆகவே திரு பாண்டி யன் அவர்கள் இப்போது பிரசிடெண்டு வேலையை விட்டு விட்டதால் இனி நடக்காதென்றே கருதியிருந்தாலும் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் கண்டிப்பாய் ஏமாந்து போவார்கள் என்பது நிச்சயம். 

தவிரவும் இந்த விருதுநகர் மகாநாடானது பெரியதொரு பிரபல மகாநாடாக இருக்கப் போகின்றதென்பதை இப்போதே ஞாபகத்தில் வைத் துக் கொள்ளுங்கள், செய்கையில் கொண்டு வரவேண்டிய பல தீர்மானங் களும் இன்னும் முற்போக்கான பல தீர்மானங்களும் இங்கு தீர்மானிக்கப்பட போகின்றது. அப்போது இன்னும் அநேகர் நமது எதிரிகளாவார்கள். அரசாங்கத்தாரும், காங்கிரஸ்காரர்களுடன் சேருவார்களே தவிர நம்முடன் சேர மாட்டார்கள், இருவரும் சேர்ந்து அதிகமாக இருக்கும். அதைவிட ஜமீன்தாரர்கள் முதலியவர்களின் தொல்லைகளும் இருக்கும். அதைவிட மக்களை ஏமாற்றி அதிகச் சம்பளம் பெற்று சோம்பேரியாய் வாழும் ஆங்கிலம் படித்த கூட்டம் இருக்கும். ஆகவே இந்த நிலைகளை சமாளிப்பு தென்பது லேசான காரியமல்ல. ஆகவே, நாம் வருங்காலத்தில் அதிகமான தொல்லைக்குத் தலை கொடுக்க வேண்டிய அளவுக்கு முன்னதாகவே தக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டியதாய் விருதுநகர் மகாநாடு நடைபெற வேண்டியிருக்கும் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். நமது கடைசி லட்சியம் உபயர்ந்த ஜாதி என்பதில்லாமல் போகவேண்டுமென்பது மாத்திரமல்லாமல் ஏழை பணக்காரன் என்கின்ற வித்தியாசமும் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதோடு ஆளுகின்றவன், ஆளப்படுகின்றவன் என்கின்ற வித்தியாசமும் இல்லாமல் போகவேண்டும் என்பதாகும். இதற்கு விருதுநகரில் விதைபோட வேண்டும் என்பதே எனது உத்தேசம். ஆகை யால் இந்த மகாநாட்டை சிறப்புற நடத்திக் கொடுங்கள், 

குறிப்பு: விருதுநகர் காஸ்மோபாலிட்டன் கிளப்பில் 09-02-1931 அன்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் ஆற்றிய உரை. 

குடி அரசு - சொற்பொழிவு - 15.021931

 
Read 37 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.